வாகனங்களை தாறுமாறாக ஓட்டினால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் - உச்சநீதிமன்றம்
மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் நபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என கூறி, 2008 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாகனங்களை வேகமாக இயக்குபவர்கள் மற்றும் தாறுமாறாக இயக்குபவர்கள் மீது, மோட்டார் வாகனச் சட்டம் மட்டுமின்றி இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பொதுச்சட்டத்தை விட சிறப்புச் சட்டம் மேலோங்கி நிற்க வேண்டும் என்பது கொள்கையாக இருந்தாலும், இந்த வழக்கில் இரு சட்டங்களையும் பயன்படுத்துவதில் மோதல் இருப்பதாக தாம் கருதவில்லை என நீதிபதிகள் இந்து மல்கோத்ரா கருத்து தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை முதல் முறையாக செய்வோருக்கு 6 மாதம் வரை தான் தண்டனை வழங்க இயலும் என்றும், இதே குற்றத்தை முதல் முறையாக செய்வோருக்கு இந்திய தண்டனை சட்டப்படி 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க முடியும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.