விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் பென்ஷன் பயன் பெறுவது எப்படி? - திட்டம் குறித்து ஓர் அலசல்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் 'பிரதமர் கிஷான் மந்தன் யோஜனா' திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Update: 2019-09-12 10:51 GMT
சிறுகுறு விவசாயிகள் 60 வயதை அடையும் போது, அவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கான பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. 

பங்களிப்பு அடிப்படையிலான இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான வயதுவரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் மட்டுமே இதில் சேர முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

குறைந்த பட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை மாதாந்திர பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வயதுக்கு ஏற்ப, ஆண்டுதோறும் மாதாந்திர பங்களிப்பு தொகை உயரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.விவசாயிகளின் மனைவி இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், அவர்களுக்கு தனியாகவே ஓய்வூதியம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

60 வயதுக்குள் விவசாயி இறந்துவிட்டால், மனைவி திட்டத்தை தொடரலாம் என்றும்  விருப்பம் இல்லை என்றால், அதுவரை செலுத்தப்பட்ட தொகை வட்டியுடன் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு  தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு பிறகு விவசாயி இறந்தால், ஓய்வூதிய தொகையில் 50 சதவீதம் மனைவிக்கு வழங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே விலக முடியும் என கூறப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 5 கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்