கர்நாடகாவை மிரட்டும் கனமழை வெள்ளம் - 28 பேர் உயிரிழப்பு
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கனமழை எதிரொலியால், கர்நாடகாவில் மொத்தம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 8 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், கர்நாடகாவின் பெல்காம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 9 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் மாயமாகினர். பாகல்கோட்டை, குடகு, மற்றும் கபினி அணை திறப்பால் மைசூரு உள்பகுதி, என பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். பெல்காம் பகுதியில் பாதிக்கப்பட்டோரை பார்த்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றார். வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டித் தரப்படும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனிடையே, மோசமான வானிலையால், வான் வழி மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.