பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் : இளைஞனும் தற்கொலை முயற்சி - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்...
கர்நாடகாவில் காதலை புறக்கணித்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே தேரலகட்டே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், சக்திநகர் பகுதியை சேர்ந்த சுஷாந்த் என்ற 22 வயது இளைஞரும், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். ஆனால் சுஷாந்த்தின் பழக்க வழக்கங்கள் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது. இதனை கண்ட மாணவி, சுஷாந்த்தை விட்டு விலகியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுஷாந்த், கடந்த 10 நாட்களாக மாணவி சென்ற இடம் எல்லாம் பின் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சுஷாந்த், தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு அவர் ஓப்புக்கொள்ளாததால், ஆத்திரமடைந்த சுஷாந்த், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சராமாரியாக மாணவியை குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து மாணவி கீழே விழ, சுஷாந்தும், கழுத்தை அறுத்து கொண்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயல, அவர்களை நெருங்க விடாமல் சுஷாந்த் கத்தியை வைத்து மிரட்டினான். இந்த பரபரப்பான சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனிடையே, அங்கு ஆம்புலன்ஸை வரவழைத்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.