இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை : வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு - அஸிம்பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வில் தகவல்
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வு இருக்கை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் கிராமங்களில் 100 பேர்களில் 68 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்றால் தற்போது 64 ஆக அது குறைந்துள்ளது. நகர்புற வேலைவாய்ப்பு 2016 ஆம் ஆண்டில்100க்கு 72 பேருக்கு கிடைத்தது என்றால், தற்போது 68 ஆக குறைந்துள்ளது. நகர்புறங்களில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 76 லிருந்து 78 ஆக அதிகரித்துள்ளது. +2க்கு குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களின் எண்ணிக்கை 72 லிருந்து 68 ஆகவும் குறைந்துள்ளதுடன் அவர்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தென் மாநிலங்களைவிட வடமாநிலங்களில் அதிகரித்துள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்களில் வேலையற்றோர் எண்ணிக்கை 16 புள்ளி 3 சதவீதமாக உள்ளது. முதுநிலை பட்டம் பெற்றவர்களில் 14 புள்ளி 2 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்கின்றனர். சட்டீஸ்கர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் 1000 நபர்களுக்கு 476லிருந்து 560 பெண்கள் வேலைக்குச் செய்கின்றனர். தமிழ்நாடு தெலுங்கானா, மகாராஷ்டிரா அருணாசல பிரதேச மாநிலங்களில் 326 லிருந்து 400 பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். 2000 ஆண்டுகளில் தொழில் திறன் 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றால், ஊதிய உயர்வு 1 புள்ளி 5 சதவீத அளவிலேயே உள்ளது. இந்த போக்கு 2016லும் தொடர்கிறது. 2000 ஆண்டுக்கு பின்னர் தொழில் நிறுவனங்களில் மேலாளர்களின் ஊக்க ஊதியங்கள் 1 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பெருவாரியான மக்களுக்கு உத்திரவாதமான மற்றும் நிலையான வருமானம் இல்லை என்றும், தொழில் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.