இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: விமான சேவை ரத்து - உஷார் நிலையில் ராணுவத்தினர்
காஷ்மீரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
காஷ்மீரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது. பத்காம் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் இருந்து, 2 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து லே, ஸ்ரீநகர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமிர்தசரஸ் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் இருந்து காலையில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
"நோட்டம் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது"
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை நீடித்ததால், காலையில் விமானிகளுக்கு நோட்டம் எச்சரிக்கை விடப்பட்டது. பிற்பகல் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் விமான சேவை தொடக்கம் - விதிக்கப்பட்ட தடை வாபஸ்
போர் பதற்றம் காரணமாக அமிர்தசரஸ், ஸ்ரீநகர் உள்ளிட்ட 8 விமான நிலையங்களில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனால் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், அமிர்தசரஸ், சிம்லா உள்ளிட்ட 8 விமான நிலையங்களில் இருந்து மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே விமான சேவையை பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. குறிப்பாக அதன் முக்கிய நகரங்களான லூகூர், பைசலாபாத், சியால்கோட் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவையை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.