6வது நாளை எட்டிய புதுச்சேரி முதல்வரின் தர்ணா போராட்டம்
புதுச்சேரிக்கு 21ஆம் தேதி கிரண்பேடி வரவிருந்த நிலையில் முன்னதாக வந்திருப்பது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த 75 சதவீத வெற்றி என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுப்பதாக கூறி, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று 6வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்கிறார். டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று வந்த கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் தலைமை செயலர், துறை செயலர்கள், துறை தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் தலைமை செயலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முதல்வர் நாராயணசாமி நிபந்தனை விதித்தார். இதனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேச்சுவார்த்தையை நிராகரித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, பிரச்சினையை தீர்வு காணும் எண்ணம் ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என்றார். தர்ணாவுக்கு பயந்துதான் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்ததாகவும், அது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த 75 சதவீத வெற்றி என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.