"சுகாதார திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்" - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை
சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் நாடு நிலையற்ற தன்மையில் இருந்ததாகவும், ஆனால் தேர்தலுக்கு பிறகு புதிய இந்தியாவை உருவாக்க அரசு முயற்சி எடுத்ததாகவும் தெரிவித்தார். சுகாதாரத்திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்த ராம் நாத் கோவிந்த், இதனால் ஏழை மக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளதாகவும் கூறினார். டயாலிசிஸ் சிகிக்சை கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆயுஸ்மேன் பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 900 மருந்து விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குடியரசுத்தலைவர், 2014-ஆம் ஆண்டில் 12 லட்சம் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தாகவும் கூறினார்.முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த ராம் நாத் கோவிந்த், சட்டப்பூர்வ குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் வெற்றிகளை குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.