ரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி பிரசாந் பூஷன், அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு,ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றியே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 மே முதல் 2016 ஏப்ரல் வரை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 76 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் 26 ஆலோசனை கூட்டங்கள் பிரான்சில் நடைபெற்றதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆகஸ்ட்4- ந் தேதி ரஃபேல் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், இந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான முறைகேடு புகார் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.