"இந்தியாவில் குளிர்பானத்தைவிட 1 ஜி.பி. டேட்டா விலை குறைவு" - மோடி பேச்சு
இந்தியாவில் ஒரு சிறிய பாட்டில் குளிர்பானத்தைவிட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக இருப்பதாக மோடி தெரிவித்தார்.
இந்தியா - ஜப்பான் இடையிலான, 13வது வருடாந்திர மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி, தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் இந்தியா அபரிமித வளர்ச்சி பெற்றிருப்பதாக குறிப்பிட்ட மோடி, விண்வெளித் துறையில் சந்திராயன், மங்கல்யான் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து வரும் 2022ஆம் ஆண்டு "விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான்" ராக்கெட்டை விண்ணில் ஏவத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்
இந்தியாவில் ஒரு சிறிய பாட்டில் குளிர்பானத்தைவிட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக இருப்பதாகவும், தொலைத்தொடர்பு சேவை கிராமங்களை சென்றடைந்து இருப்பதாகவும் மோடி கூறினார். இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானோர் செல்போன் பயன்படுத்துவதாகவும், செல்போன் உற்பத்தியில் முதலிடத்தை பிடிப்பதற்காக வேகமாக முன்னேறி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.