"விமான நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை" - மத்திய அமைச்சர் அறிக்கை
மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார்.
சமீபத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து அதிமுக உறுப்பினர் அர்ஜூனன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் பெங்களூருவில் இருந்து கொச்சி வரை சென்ற விமானமும், கோவையில் இருந்து ஹைதராபாத் வரை சென்ற விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டு பின்னர் அது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சர்வதேச விமானங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதாகவும், அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில் விமானங்களை எந்த நேரத்தில் இயக்குவது என்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. கூட்ட நெரிசல் நேரம் உள்ள நேரங்களில் இயக்கப்படும் விமானங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.