"நிக்கா ஹலாலா" : ஒர் அலசல்
இஸ்லாமியர்களால் பின்பற்றப்படும் நிக்கா ஹலாலா முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமியர்களால் பின்பற்றப்படும் நிக்கா ஹலாலா முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தில், விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் முதல் கணவரே திருமணம் செய்து கொள்ளும் நிக்கா ஹலாலா என்ற முறை, சட்டப்பூர்வமாக செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்லாத்தில், 3 முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்து விட்டால், அந்த மனைவி, தன் பழைய கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விவாகரத்து பெற்ற பெண், வேறொரு நபரை திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால் மட்டுமே பழைய கணவரை மீண்டும் திருமணம் செய்து வாழ முடியும்.அப்படி இல்லாத பட்சத்தில், அந்த பெண்ணின் 2 - வது கணவர் இறந்தால் தான், அவரால், தன் பழைய கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த நிக்கா ஹலாலா முறையை எதிர்த்து, டெல்லியை சேர்ந்த சமீனா பேகம் என்பவர் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ. எம் கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு ஏற்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நிக்கா ஹலாலா மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பலதார மணம் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. முத்தலாக் முறை, அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அறிவித்திருந்தது. இந்த சூழலில், நிக்கா ஹலாலா முறைக்கு எதிரான இந்த மனு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.