பகலில் டிராவல்ஸ் அதிபர் - இரவில் கொள்ளையன்

10 ஆண்டுகளாக தமிழகத்தை தனி ஒருவனாய் மிரட்டி வந்த கொள்ளையன் போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்... யார் அவன்..? போலீசார் அவனை பிடித்தது எப்படி?

Update: 2018-07-01 06:24 GMT
பகலில் டிராவல்ஸ் அதிபர் - இரவில் கொள்ளையன்



தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருக்கு இரண்டு மனைவிகள், 1999 ஆம் ஆண்டு முதல் தேனி, மதுரை, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில் தனி ஒருவனாய் சென்று திருட்டு சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்தான் வெங்கடேசன்... அங்கு அவன் மீது பலருக்கும் சந்தேகம் எழ, தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றி கொண்டுள்ளான்...செம்மஞ்சேரி கண்ணகி நகரில் குடியேறிய வெங்கடேசன், சென்னையிலும் பல இடங்களில் கை வரிசை காட்ட தொடங்கினான்...வெங்கடேசன்  திருடும் முறை சற்றே வித்தியாசமானது... திருடும் முன்பாக காலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீதி வழியாக வலம் வரும் வெங்கடேசன், எந்தெந்த வீடுகளில் எல்லாம், நாளிதழ்கள், பால் பாக்கெட்டுகள் எடுக்காமல் இருக்கிறது என்பதை நோட்டமிடுவார்... இதை வைத்தே வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு ,  அன்று இரவே அந்த வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விடுவது வெங்கடேசனின் ஸ்டைல்..... 

எத்தனை பெரிய பூட்டாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் சிறு இரும்பு கம்பியை மட்டுமே பயன்படுத்தி திறந்து விடுவாராம் வெங்கடேசன்... 

வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை கண்டால், டி.வி.ஆர் என்ற அதன் பதிவுகளை மட்டும் எடுத்துகொண்டு சென்றுவிடுகிறார்... அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் புத்தி கூர்மையை சற்று அதிகமாகவே பயன்படுத்தியுள்ளார் வெங்கடேசன்...

திருடிய நகைகளை ஆந்திராவில் விற்று, வாகனங்கள் வாங்கி ஒரு டிராவல்ஸ் நிறுவனமே நடத்தி வந்துள்ளார் வெங்கடேசன்... எனவே பகலில் டிராவல்ஸ் உரிமையாளராக வலம் வரும் வெங்கடேசன் மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை... பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பார்கள்... குற்ற சம்பவங்களை தடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விசுவநாதன் உத்தரவின் பேரில் மாநகர போலீசார் இரவில் சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

கோட்டூர் புரத்தில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வெங்கடேசனை போலீசார் விசாரித்துள்ளனர். வழக்கம் போல டிராவல்ஸ் உரிமையாளர் என்றே தன்னை அறிமுகப்படுத்திகொண்ட வெங்கடேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழ, அவரை தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதனையடுத்து போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை அனைத்தையும்   கொட்டி விட்டார்  வெங்கடேசன்... அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 சவரன் தங்க நகைகள் 40 ஆயிரம் ரூபாய் பணம் செல்போன்கள் மற்றும் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர்.

10 ஆண்டுகளாக சிக்காத திருடன் போலீசாரிடம் சிக்கியுள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே சமயம் அவரை டிராவல்ஸ் உரிமையாளர் என நம்பிகொண்டிருந்த மக்களுக்கு இச்சம்பவம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - காவல்துறை உதவி ஆணையர்

Tags:    

மேலும் செய்திகள்