பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் விவரம்
நான்கு ஆண்டுகளில், பிரதமர் மோடி, 52 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அதற்கான செலவு 355 கோடி ரூபாய் என்றும் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடியின், வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல் கோரி, பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார். அதற்கு, பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இதன்படி, கடந்த 4 அண்டுகளில், பிரதமர் மோடி, 41 முறை, வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில், அவர் 52 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
இதற்கு, 355 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 465 ரூபாய் செலவாகியுள்ளது. இந்தியா விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால், இதில் 5 பயணங்களுக்கான செலவு சேர்க்கப்படவில்லை.
இந்த, 41 வெளிநாட்டு பயணங்களில் 2015-ம் ஆண்டு பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாட்டு பயணம் தான் அதிக செலவு ஏற்படுத்தியது. அந்த பயணத்துக்கு மட்டும் 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. இதில், பூடானுக்கு சென்று வந்தது தான் மிக, மிக குறைந்த செலவாகும். பூடான் பயணத்துக்கு, 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு, ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி, சமீபத்தில் இந்தோனேசியா சென்று வந்தது வரை அவரது சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 52 நாடுகளை பார்க்கலாம்...
1. பூடான், 2. பிரேசில், 3. நேபாளம், 4. ஜப்பான், 5. இலங்கை, 6. ஜெர்மனி, 7. ஸ்பெயின், 8 ரஷ்யா, 9. பிரான்சு, 10. கஜகஸ்தான், 11. போர்ச்சுக்கல், 12. அமெரிக்கா, 13. நெதர்லாந்து, 14. இஸ்ரேல், 15. சீனா, 16. மியான்மர், 17. பிலிப்பைன்ஸ், 18. சுவிட்சர்லாந்து, 19. ஜோர்டன், 20. பாலஸ்தீனம், 21. ஐக்கிய அரபு எமிரேட், 22. ஓமன், 23. சுவீடன், 24. இங்கிலாந்து, 25. ஆஸ்திரேலியா, 26. பிஜு தீவு.
27. செசல்ஸ், 28. மொரி சீயஸ், 29. கனடா, 30. மங்கோலியா, 31. தென்கொரியா, 32. வங்கதேசம், 33. துர்க் மெனிஸ்தான், 34. கிர்கிஸ்தான், 35. தஜிகிஸ்தான், 36. அயர்லாந்து, 37. மலேசியா, 38. சிங்கப்பூர், 39. ஆப்கானிஸ்தான், 40. பாகிஸ்தான், 41. பெல்ஜியம், 42. சவுதிஅரேபியா, 43. ஈரான், 44. கத்தார், 45. மெக்சிகோ, 46. குமாசாம்பிக், 47. தென்ஆப்பிரிக்கா, 48. தான்சானியா, 49. கென்யா, 50. வியட்நாம், 51. லாவோல், 52. இந்தோனேசியா.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டு சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விபரத்தை, பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.
இதில், பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு செலவு விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.