நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைப்பு

நிகர்நிலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2018-06-27 04:56 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  நிகர்நிலை பல்கலைக் கழக மருத்துவ கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, பல்கலைக் கழக மானிய குழு, நிகர்நிலை பல்கலை கழக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய குழு அமைத்து, 4 மாதங்களில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் டேகா தலைமையில் 11 உறுப்பினர்கள் கொண்ட கட்டண நிர்ணயக் குழுவை அமைத்துள்ளதாக, பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு அக்டோபர் 31-ம் தேதிக்குள் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்