கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை எனக் கூறி, நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரிகிருஷ்ணன், முதலமைச்சருக்கும், சுற்றுலாத் துறை செயலருக்கும் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், லெமூர் கடற்கரையில் கடந்த மே மாதம், சுற்றுலாவிற்கு வந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் கடலில் சிக்கி உயிரிழந்ததை குறிப்பிட்டிருந்தார். அப்போது தானும், தனது குடும்பத்தினரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் சிலரை காப்பாற்றியதாகவும், தங்கள் கண்முன்னே மருத்துவர்கள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தானும் தனது குடும்பத்தினரும் மீளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால் 5 மருத்துவர்களை நாம் இழந்திருக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள சுற்றுலாத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, லெமூர் கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், அலையில் சிக்குபவர்களை காப்பாற்ற கயிறு, மிதவை போன்ற அவசர பாதுகாப்பு உபகரணங்களுடன் காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.