இந்தியன் 2 தடை கோரிய வழக்கு.. அடுத்த ஸ்டெப் வைக்க ஆயத்தமாகும் வழக்கறிஞர்கள்

Update: 2024-07-12 02:17 GMT

இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

வர்மக்கலை தலைமையாசான் மதுரை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் அனுமதியுடன் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டதாகவும், 2-ஆம் பாகத்தில் அனுமதியின்றி வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தான் எழுதிய புத்தகங்களில் இருந்த தகவல்களை தழுவி இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து வாதாடிய இயக்குநர் சங்கர் தரப்பு வழக்கறிஞர், வர்மக்கலை உலக அளவில் உள்ள கலை எனவும், அகஸ்தியர் தோற்றுவித்த வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் வாதிட்டார். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, வணிக பிரச்சனைகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை எனக் கூறி, வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், திரைப்பட நிறுவனமான லைகா புரோடக்‌ஷனின் பதில் மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு செய்வதாகவும் கூறி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்