தென்றலையும் தேன் சுவையாய் மாற்றிய எஸ்.ஜானகி பிறந்த தினம் இன்று..!
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, 1957ல் வெளியான 'விதியின் விளையாட்டு' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தென்றலையும் தேன் சுவையாய் மாற்றிய எஸ்.ஜானகி பிறந்த தினம் இன்று..!
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, 1957ல் வெளியான 'விதியின் விளையாட்டு' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து வெளியான சிங்கார வேலனே தேவா பாடல் தான் அவரை அடையாளம் காண்பித்தது.
1960 மற்றும் 1970களில் எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா போன்றவர்களுடன் போட்டியிட்டு நிலைத்து நின்ற எஸ்.ஜானகி, 15 மொழிகளில் சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார்.
மழலை கொஞ்சும் மெல்லிய குரலில் வார்த்தைகளுக்கு வலிக்காமல் பாடும் ஜானகிக்கு, 1980களுக்கு பின் பொற்காலம் என்றே சொல்லலாம்.
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் அவர் பாடிய மச்சான பாத்தீங்களா பாடல், அடுத்த தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தது.
இளையராஜாவின் இசை கோலோச்சிய காலத்தில், ஜானகி இல்லாத பாடல்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இளையராஜா இசையில் அதிகமாக பாடிய பாடகி இவர்தான்...
1957 தொடங்கி 2016 வரை 60 ஆண்டு கால இசைப் பயணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம் உட்பட 15 மொழிகளின் முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடியிருக்கிறார்.
பின்னணி பாடகிக்காக 4 முறை தேசிய விருதுகள். தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகளிடம் 33 முறை விருதுகள். கவுரவ டாக்டர் உட்பட வேறு பல விருதுகள். இப்படி ஜானகியின் குரலுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம்.
ஆனால், 2013ல்தான் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவித்தார்கள். மிக கால தாமதமான அங்கீகாரம் என கூறி அதை மறுத்தார், எஸ்.ஜானகி.
1960களில் தொடங்கி பல தலைமுறை ரசிகர்களை குரலால் கட்டிப்போட்ட ஜானகி, குழந்தை குரலிலும் கொஞ்சிப் பாடி இருக்கிறார்.
60 ஆண்டுகள் இடை விடாமல் ஓடிய இந்த இசைக்குயில், 2016ல் ஒரு மலையாள பாடலை பாடி விட்டு மவுனிப்பதாக அறிவித்தபோது ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.
ரசிகர்களின் அன்பு தொல்லையால், 2018ல் 'பண்ணாடி' படத்துக்காக ஒரு பாடலை பாடினாலும் வருங்கால சந்ததிக்கு வழியை விடுவதற்காக திரையிலோ, மேடைகளிலோ பாடுவதில்லை என்ற தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் எஸ் ஜானகி.
தனது தேவாமிர்த குரலால் தென்றல் காற்றையும் தேன் சுவையாய் மாற்றிய எஸ்.ஜானகியின் பிறந்த நாளில், அவரை இசை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.