"ராதிகா தான் லேடி சூப்பர் ஸ்டார்" - சரத்குமார்

நடிகை ராதிகாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவரது கணவரும் நடிகருமான சரத்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-26 01:49 GMT
நடிகை ராதிகாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவரது கணவரும் நடிகருமான சரத்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். ராதிகா தான் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். 

1978ம் ஆண்டு வெளியான "கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவால் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர், நடிகை ராதிகா. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து, படிப்படியாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள். சினிமாவில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தன் முத்திரையை பதித்தார். 41 ஆண்டுகாலமாக கலைத்துறையில் உள்ள ராதிகாவிற்கு, அண்மையில் சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தின் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் 'நடிகவேள் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ராதிகா, தான் நடிக்க போவதை அறிந்த தனது தந்தை ம்.ஆர்.ராதா ஆச்சரியப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற ராதிகாவின் கணவரும் , நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ராதிகாவின் திறமை மற்றும் உழைப்பு பற்றி பெருமையாக பேசினார். தன்னை பொருத்தவரை, ராதிகா தான் லேடி சூப்பர்ஸ்டார் என்று கூறிய சரத்குமார், நடிகவேள் செல்வி என்ற பட்டம் அவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார். ஆனால் அதே சமயம், அவரது திறமைக்கும் உழைப்புக்கும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் , ஆனால் அந்த அங்கீகாரம் கிடைக்காததில் தனக்கு வருத்தம் இருப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் திரைக்கு வர உள்ள மார்க்கெட் ராஜா, எம்.பி.பி.எஸ். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் மக்களை மீண்டும் திரையரங்குக்கு அழைத்து வரும் தொடக்கப்புள்ளியாக இந்த படம் இருக்கும் என்றும் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்