எப்படி இருக்கிறது ‘செக்கச் சிவந்த வானம்’ ?

சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய், ஜோதிகா என்ற மிகப்பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் செக்க சிவந்த வானம்.

Update: 2018-09-27 05:34 GMT
ட்ரெய்லரில் நாம் பார்த்தது தான் படத்தின் கதை... சேனாபதி எனும் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ்.. அவருடைய மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு. வழக்கம்போல் சேனாபதியின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. இந்த மூன்று மகன்களில் யார் அந்த இடத்திற்கு வருகிறார்கள் என்பதுதான் கதை. இதில் அடிதடி, வன்முறை, துரோகம் எல்லாம் கலந்து இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு.ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் இருக்கிறது. 



அதன் அடிப்படையில் தான் கதை நகர்கிறது . அரவிந்த்சாமி முரட்டுத்தனமான ஒருவர், புத்திசாலித்தனமும் பாசமும் இருக்கும் அருண் விஜய், அப்பாவிடம் பெரிய ஒட்டுதல் இல்லாவிட்டாலும் அவர் மீது பாசமுள்ள மகனாக வரும் சிம்பு. அரவிந்த்சாமியின் நண்பராக வரும் விஜய் சேதுபதி காவல் துறையில் பணிபுரிகிறார். எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன்னுடைய காரியத்தில் குறியாக இருக்கும் கதாபாத்திரம் அவர். இப்படி ஒவ்வொருவருக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகிகளை பொறுத்தவரை ஜோதிகாவிற்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. குடும்பத்தில் அனைவருக்கும் இடையே பாலமாக இருப்பது மட்டுமில்லாமல் அரவிந்த்சாமிக்கு பலமாக இருக்கும் மூத்த மருமகள் ஜோதிகா. ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய்யின் மனைவியாக வருகிறார். அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் இடையேயான காதலில் ஆழம் குறைவு.சிம்புவின் காதலியாக வரும் டயானா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அரவிந்த்சாமியின் கள்ளக்காதலியாக அதிதி ராவ் துருதுரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் படத்தின் வசனங்களும் நச்.     


தான் செய்த தவறுக்கு விசாரணை ஆணையத்தின் முன்பு பதில் சொல்லும் காட்சி, மற்றொரு தாதாவாக வரும் தியாகராஜனின் வீட்டிற்கு சென்று பேசும் காட்சிகளில் விஜய் சேதுபதி கலக்குகிறார். “இங்க டீ நல்லா இருக்கும்னு வந்தேன்” என்று சொல்லி விஜய்சேதுபதி டீல் பேசத் தொடங்குகிறார். அந்த டீலிங் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி அவரை வழி அனுப்பும் தியாகராஜன், “இது டீக்கடை இல்ல இனிமே இங்கே வராத” என்று சொல்வது ரசிக்க வைக்கிறது.
தனது கணவரின் கள்ளக்காதலி அதிதி ராவிடம் , அவரது வீட்டுக்கே சென்று ஜோதிகா பேசும் காட்சி மனதில் நிற்கிறது. சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. அவ்வப்போது கேட்கும் துப்பாக்கி வெடி சத்தங்கள் இது தீபாவளிக்கு வர வேண்டிய படமோ என்று தோன்ற வைக்கிறது.  



ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் முழு நீளத்தில் இல்லாமல் சில நிமிடங்கள் மட்டுமே வருகிறது, அதுவும் பொருத்தமாக இருக்கிறது. குறிப்பாக பூமி பூமி பாடல் ஆங்காங்கே வருவது மட்டுமல்லாமல் அதையே பல இடங்களில் பின்னணி இசைக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவில் நம்ம ஊர் மட்டுமின்றி துபாய், செர்பியா என அனைத்தும் அழகாக உள்ளது. முதல் பாதி மிகவும் வேகமாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது. ஒரு சில காட்சிகளை நாம் முன்பே கணிக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கேங்ஸ்டர் படத்தை மணிரத்னம் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார். 


காற்று வெளியிடை படத்திற்கு பிறகு வந்துள்ள செக்கச் சிவந்த வானம் மணிரத்னத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்