விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் 100 மீ ஓட்டம் : இந்தியாவுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் வெள்ளி பதக்கம் வென்றார். 11.32 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்த டுட்டி சந்த் 0.02 விநாடிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.
400மீ ஓட்டம் : இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் வெள்ளி பதக்கம் வென்றார். அதே போல் ஆடவருக்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் யாகியா வெள்ளி பதக்கம் வென்றார்.
வில்வித்தை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி
மகளிர் வில்வித்தை குழு பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சீன தையே அணியை 225-223 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
குதிரை ஏற்றம் : இந்தியாவுக்கு 2 வெள்ளி
பெண்கள் பிரிவு குதிரையேற்றத்தில் இந்திய வீராங்கணை பவாத் மிர்ஸா வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் குதிரையேற்றம் குழு பிரிவிலும் இந்திய அணி வெள்ளி வென்றது.
10,000 மீட்டர் ஓட்டம் : இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்ஷ்மனன் வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.
ஸ்குவாஷ் : ஒரே நாளில் 3 பதக்கம்
ஆசிய போட்டி ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி ஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
குண்டு எறிதல் : இந்திய வீரர் தஜிந்தர்பால் தங்கம்
ஆசிய போட்டி ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 20 புள்ள 75 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தை அவர் தட்டிச் சென்றார். இது ஆசிய போட்டியை பொறுத்தவரை புதிய சாதனையாகும்.
Next Story