சம்பவம் இருக்கு இன்னைக்கு..!..நம்பர் 1 'கார்ல்சன்' VS நம்ம ஊர் 'பிரக்ஞானந்தா'
சம்பவம் இருக்கு இன்னைக்கு..!..நம்பர் 1 'கார்ல்சன்' VS நம்ம ஊர் 'பிரக்ஞானந்தா' - பட்டத்தை வெல்லப்போவது யார்?
ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா - நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் இடையிலான இறுதிப்போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்தது. அசர்பைஜான் நாட்டில் சர்வதேச செஸ் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு, இறுதிப்போட்டியில் தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவும், நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். பாஹு நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா களம் இறங்கினார். போட்டியில், இரு வீரர்களும் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி பரஸ்பரம் சவால் அளித்தனர். காய்களை நகர்த்த பிரக்ஞானந்தா சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டாலும், கார்ல்சனுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடினார். இருவரும் சம பலத்துடன் இருந்த நிலையில், ஆட்டத்தின் 35வது நகர்த்தலில் போட்டியை சமனில் முடிக்க பிரக்ஞானந்தாவும் கார்ல்சனும் ஒப்புக்கொண்டனர். இதனால் இறுதிப்போட்டியின் முதல் சுற்று வெற்றி, தோல்வி இன்றி சமனில் முடிந்தது. இருவருக்கும் இடையே 2ம் சுற்று, இன்று நடைபெற உள்ள நிலையில், இதில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.