பன்றி சிறுநீரகம்... பறிபோன உயிர்கள்..நடுநடுங்க விடும் மரபணு ஆராய்ச்சிகள் உயிரிழக்க காரணம் என்ன?
பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் உயிரிழந்த நிலையில், பலருக்கு நம்பிக்கையாக பார்க்கப்பட்ட சிகிச்சை முறையில் நடப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அமெரிக்காவில் மார்ச் மாதம் மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட செய்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மசாசூசெட்ஸ் மருத்துவமனையில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறைந்தது 2 ஆண்டுகளாகவது சிறுநீரகம் செயல்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் மகிழ்ச்சியை தெரிவித்த ஸ்லேமேன், இந்த சிகிச்சை முறை ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் என்றார். அவர் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலரால் நம்பிக்கையாக பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2 மாதங்களில் உயிரிழந்துவிட்டார் ஸ்லேமேன்..
மசாசூசெட்ஸ் மருத்துவமனை தரப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாகவே ஸ்லேமேன் இறந்தார் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அவரது மரணத்திற்கு காரணம் என்ன...? என்ற கேள்வி மருத்துவர்கள் மத்தியில் மட்டுமல்ல செய்தியை மருத்துவ உலகில் பெரும் சாதனையாக பார்த்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஸ்லேமேன் மட்டுமல்ல.. இதற்கு முன்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இருவர் உயிரிழந்து இருக்கிறார்கள். 2022 ஜனவரியில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட் 2 மாதங்களில் உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் பன்றி இதயத்தை டேவிட் உடல் நிராகரிக்கவில்லை என்ற மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சிக்கு பின்னர், அவரது உடலில் உருவாகிய நோய் எதிர்ப்பு சக்தியே உறுப்பு செயல் இழப்புக்கு காரணம் என தெரிவித்தனர்.
2023 நவம்பரில் அதே மருத்துவமனையில் மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்ட லாரன்ஸ் பேஸட், 6 வாரங்களில் உயிரிழந்தார்.
மருத்துவ உலகில் பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது மரபணு மாற்றப்பட்ட பன்றிகள். இந்த சிகிச்சை முறையில், பன்றி உறுப்புகளில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்கள் நீக்கப்பட்டு, மனித மரபணுக்கள் சேர்க்கப்படுகிறது. பின்னர் மனிதருக்கு பொருத்தப்படுகிறது.
இந்தியாவில் 1997 ஆம் ஆண்டு அசாமை சேர்ந்த மருத்துவர் தனிராம் பருவா, முற்றிலும் உடல் உறுப்புகள் செயலிழந்த நோயாளிக்கு பன்றியின் இதயம், நுரையீரலை பொருத்தினார். அவரது ஆய்வு வெற்றிகரமாக அமையவில்லை. நோயாளி 7 நாட்களில் உயிரிழக்க கைது செய்யப்பட்ட பருவா, 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2022-ல் அவர் பேசியபோது, பன்றி உறுப்புகள் மனிதனுக்கு பொருந்தும் என உறுதியாக குறிப்பிட்டார். இதையே சொல்லும் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், வெற்றியை வசமாக்கும் ஆய்வை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.