இனி தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை ...நாய் இறைச்சியை கொரியர்கள் உண்பது ஏன்?
தென்கொரியாவில் நாய் இறைச்சியை தடை செய்ய அந்நாடு முன் வந்திருப்பது, உலக அரங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆட்டு இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியா? என சந்தேகம் கிளப்பப்படும் போதெல்லாம் நாம் அதிர்ச்சி அடைவதுண்டு. ஆனால் இந்தியாவில் கூட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினரால் நாய் இறைச்சி உண்ணப்படுவது பலமுறை சர்ச்சையாகி இருக்கிறது.
இருப்பினும் சீனா, கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், நாய் இறைச்சி உண்பது விலங்கு நல சட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை தடுக்க அந்தந்த நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மறுபுறம் நாய் இறைச்சி உட்கொள்வதால் ஒட்டுண்ணி தாக்குதல், சுவாச கோளாறு, காலராவுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களின் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகக்கூடும் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர்களின் உயிரை வேட்டையாடும் ரேபிஸ் மிக பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில் தென்கொரியாவில் சுமார் 1,150 நாய் வளர்ப்பு பண்ணைகள், 34 இறைச்சிக் கூடங்கள், 219 விநியோக நிறுவனங்கள் மற்றும் 1,600 உணவகங்களில் நாய் இறைச்சி பரிமாறப்படுவதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன.
ஆனால் தென்கொரியாவின் இளைய தலைமுறையினர் நாய் இறைச்சிக்கு எதிராக உள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
முன்பு கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க... நாய் இறைச்சியை உண்பது தென் கொரியாவில் பழக்கமாக தொடர்ந்த நிலையில், தற்போது நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் முதியவர்களிடமே அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக தெருநாய்களை தத்தெடுத்து வளர்த்து வரும்
தற்போதைய தென்கொரியா அதிபராக இருக்கும் யூன் சுக் இயோல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நாய் இறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாய் இறைச்சி தடை செய்வது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள தென் கொரிய அரசு, 2027 முதல் தென் கொரியாவில் நாய் இறைச்சி தடையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.