நிலவை தொடும் கடைசி சுற்றில் லூனா-25 திடீர் கோளாறு - அதிர்ச்சியில் ரஷ்யா
நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11ஆம் தேதி சோயஸ் ராக்கெட் மூலம் ரஷ்யா அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு 17ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்ததாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். தொடர்ந்து 5 நாட்கள் சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி வந்து, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தரையிறங்குவதற்கான கடைசி சுற்றுவட்டப்பாதைக்கு, அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுத்த போது, லூனா-25 விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி, இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போது உள்ள பாதையிலே சுற்றி வருகிறது. கோளாறை சரிசெய்யும் முனைப்பில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், திட்டமிட்டபடி நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக தரையிறங்குவதற்கான பாதையில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.