``தமிழராக இருந்தாலும்.. முடிவுக்கு கொண்டு வருவேன்'' - அனலை கக்கியஅதிபர் அனுரா
சாதி, மதங்களை கடந்து பன்முக தன்மையை மதிக்கும் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான பணிகளை தொடங்கப் போவதாக அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிபர் தேர்தல் வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இலங்கை தேர்தல் வரலாற்றில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில்தான் வன்முறைகள், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்று முடிந்ததாகவும், அதுவே மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என குறிப்பிட்ட அவர், அதற்கான திறமையான குழு தம்மிடம் இருப்பதாக கூறினார். அனைவரது ஒத்துழைப்புடனும், கூட்டு முயற்சியுடனும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் கூறினார். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், அனைவரும் "நாம் இலங்கை குடிமக்கள்" என்று பெருமையுடன் வாழக்கூடிய வகையில் நாடு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாதி, மதம், இனம், வர்க்கம் என நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து, பன்முகத் தன்மையை மதிக்கும் தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலை திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் அநுர குமார திசாநாயக்க கூறினார்.