வல்லரசுக்கே விபூதி அடித்த ஆந்திர பாய்ஸ்..அரண்டு போன அமெரிக்க அதிகாரிகள்..தோண்டியெடுத்த சென்னை போலீஸ்

x

குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல விசா எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.

இதன் காரணமாக, போலி சான்றிதழ்கள் தயாரித்து, மாணவர் விசா மற்றும் டூரிஸ்ட் விசா மூலமாக, அமெரிக்காவில் நுழைந்து விடலாம் என, இளைஞர்கள் பலர் தொடர்ந்து முயற்சி செய்து சிக்கி வருகின்றனர்.

போலி சான்றிதழ் வழங்கி, அமெரிக்கா செல்ல முயற்சிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன...

இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரக பாதுகாப்பு அதிகாரியான மெல்வின் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தெலங்கானாவை சேர்ந்த முகமது இர்வான் கான், செயது பைத் க்வாட்ரி என்ற 2 இளைஞர்கள், போலி சான்றிதழ் மூலமாக அமெரிக்கா விசாவிற்கு முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் மருத்துவ கண்காட்சிக்கு செல்வதாகக் கூறி, போலியான சான்றிதழ்கள் பலவற்றை கொடுத்து சுற்றுலா விசாவில் செல்ல முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் போலி கல்வி சான்றிதழ்கள் சமர்ப்பித்து அமெரிக்கா செல்ல முயன்ற ஆந்திராவை சேர்ந்த ஹேம்நாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ கண்காட்சி, மேற்படிப்புக்காக செல்லுதல் என அமெரிக்காவிற்கு நுழைய முயற்சிக்கும் இளைஞர்கள், அடுத்த கட்டமாக அந்நாட்டில் இருக்கும் ஐடி நிறுவனங்களில் பணி கிடைத்திருப்பதாக போலி பணி ஆணைகள் தயாரித்து, விசா எடுக்க முயற்சி செய்ததும் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கைதான ஆந்திர இளைஞர் ஹேம்நாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குண்டூர் பகுதியில் ஹரிபாபு என்பவரை போலீசார் கைது செய்தனர். போலியாக கல்வி சான்றிதழ் தயாரிக்க ஹரிபாபு, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி, பலருக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது.

இன்னும் 50 பேர் இதுபோன்று போலி சான்றிதழ் மூலமாக விசாவிற்கு விண்ணப்பித்திருப்பதாக, அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவிப்பதால், போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்