யார் இந்த காடிரோவைட்ஸ் படையினர்?... வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் புதினின் நம்பிக்கைக்குரிய காடிரோவைட்ஸ் படைகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் புதினின் நம்பிக்கைக்குரிய காடிரோவைட்ஸ் படைகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த பின்னணியை விளக்குகிறது இந்த செய்த் தொகுப்பு... உக்ரைன் போரின் கோரமுகத்தை சமீபத்தில் புச்சா நகரிலிருந்து வெளியாகிய காட்சிகள் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு மக்கள் சாலைகளில் சடலமாக கிடந்த காட்சிகள் உலகையே உலுக்கியது. இப்போது இந்த கொடூர கொலைகளுக்கு பின்னணியில் கொடூரமானவர்கள் என அறியப்பட்ட புதினின் காடிரோவைட்ஸ் படை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காடிரோவைட்ஸ் படையின் தலைவராக இருப்பவர் ரம்ஜான் கதிரோவ். செச்சன்யா விடுதலைப் போராளியின் மகனான கதிரோவ், செச்சன்யா குடியரசை ரஷ்ய ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்துவிட்டு, விளாடிமிர் புதினின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வருகிறார். இப்போது ரம்ஜான் கதிரோவ் தலைமையிலான செச்சன்யா படைகள் உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது. சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பெயர்போன செச்சன்யா படைகள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடு பாராமல் படுகொலை செய்யும் படையாக அறியப்பட்டது. 2014 சிரியா போரில் செச்சன்யா படைகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கீவ் நகரின் நாசிக்களை எதிர்த்து போரிடுவதாக கூறியிருந்தார் ரம்ஜான் கதிரோவ். உக்ரைனில் தனது படைகள் சண்டையிடும் காட்சிகளை அவ்வப்போது டெலிகிராமில் பகிர்ந்து வருகிறார். செச்சன்யா படைகள் வருகை ஏற்கனவே உக்ரைனிய மக்களை பீதியடைய செய்திருந்தது. மரியபோல் நகரில் தனது படைகளுடன் இருந்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளார் ரம்ஜான் கதிரோவ். இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது. மரியபோலில் நடந்த மனித உரிமைகளை மறைக்கவே ரஷ்யா அந்நகரை தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறிவருகிறார். இதற்கிடையே புச்சா நகரை காட்டிலும் போரோடியாங்கா நகரில் அதிகமான மனித சடலங்கள் கிடப்பதாக உக்ரைன் கூறியிருப்பது உலக மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
Next Story