எல்லை பாதுகாப்பு தொடர்பான சீனாவின் புதிய சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு
இந்தியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் எல்லையை பாதுகாப்பது தொடர்பாக சீனா கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தின் கீழ் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்தியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் எல்லையை பாதுகாப்பது தொடர்பாக சீனா கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தின் கீழ் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் சீனா, இந்தியா மற்றும் பூடானிடம் மட்டுமே எல்லைப் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கிறது.
இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூர எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பிரச்சினை நிலவுகிறது. கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேசத்தில் சமீபகாலமாக சீனாவின் அத்துமீறல் அதிகரிப்பு காரணமாக, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இரு நாட்டு எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில், சீனா எல்லை பாதுகாப்பது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு புனிதமானது மற்றும் மீற முடியாதது என்பதை வலியுறுத்தும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவை மையப்படுத்தி சீனா கொண்டுவரும் இச்சட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
எல்லையில் கிராமங்களை கட்டமைத்து அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குவது, எல்லையில் சாலை, ரயில் மற்றும் வான் போக்குவரத்து உள்கட்டமைப்புக்களை ஏற்படுத்துவது இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களாக கூறப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருக்கும் இந்தியா, சீனா இந்த புதிய சட்டப்படி எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் அமைதியை பேண இருதரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும், நெறிமுறைகளையும் இந்தியா நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருதரப்பும் இதுவரையில் எல்லை நிர்வாகம் மற்றும் எல்லை பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டுவரும் சீனாவின் ஒருதலைப் பட்சமான முடிவு கவலையை அளிக்கிறது என அறிக்கையில் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
எல்லை நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் இந்த நடவடிக்கையை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Next Story