150 ஆண்டில் இல்லாத பொருளாதார நெருக்கடி: கடன் சுமையில் லெபனான் பொருளாதாரம் - அங்கு நடப்பது என்ன...?

150 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் லெபனானில் நாட்டு மக்களுக்கு உணவு, மின்சாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நடப்பது என்ன...? பார்க்கலாம்...
150 ஆண்டில் இல்லாத பொருளாதார நெருக்கடி: கடன் சுமையில் லெபனான் பொருளாதாரம் - அங்கு நடப்பது என்ன...?
x
ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட லெபனான், இப்போது வறுமையின் கோரங்களை வடுக்களாக சுமந்து நிற்கிறது. 

எரிபொருள், மின்சாரம் இல்லை மக்கள் பரிதவிப்பு
  
எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அரசு தவிக்கிறது. ஆங்காங்கே எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி செய்ய முடியாத நிலையில் நகரங்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மருத்துவமனைகளில் நெருக்கடி குடிநீரின்றி மக்கள் தவிப்பு

மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகளையும் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினசரி சாப்பிட வேண்டிய மருந்துகள்கூட மருந்தகங்களில் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் உணவு பொருட்களை வாங்க முடியாமல்  தவிக்கும் மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டாலும் தவிக்கிறார்கள். குடிநீர் விலையும் உயர்ந்துள்ளது. உணவுக்காக ஒவ்வொரு நாளும் மக்கள் தொண்டு நிறுவனங்களின் கூடங்களில் கவலைதோய்ந்த முகத்துடன் காத்திருக்கின்றனர். 

வேலையிழப்பு, வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள்

மின்சாரம் இல்லாததால் தொழில்துறையும் முடங்கியதால், 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். 60 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் மக்கள் பிழைப்புதேடி,  வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.  

லெபனான் அரசின் கடன் சுமை 
சுமார் ரூ. 6.86 லட்சம் கோடி

1975-1990 காலக் கட்டத்தில் லெபனான் உள்நாட்டு போருக்கு பின்னர் அமைந்த அரசாங்கங்களால் வாங்கப்பட்ட கடன்களால், கடந்த ஆண்டு அரசின் மொத்த கடன் சுமை 6 லட்சத்து 86 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. இது அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் 170 சதவீதமாகும். அந்நாட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிந்துள்ளது. 

150 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி

வாங்கிய கடனை திருப்பி செலுத்தவே முடியாமல் திணறும் லெபனான் 150 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறும் உலக வங்கி, ஐ.நா., பிரான்ஸ், அமெரிக்கா உதவினாலும், நெருக்கடியிலிருந்து மீள லெபனானுக்கு 19 ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

லெபனான் இப்போது சந்தித்திருக்கும் இத்தகைய நெருக்கடியான நிலைக்கு, குளறுபடியான அரசியல், ஊழல் மற்றும் மோசமான பொருளாதார கொள்கையே காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

அரசியலில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடும்.... மோசடிகளும்...

1975-1990 லெபனான் உள்நாட்டு போர் இறுதி உடன்படிக்கைபடி, அதிபர் பதவி கிறிஸ்தவருக்கும், பிரதமர் பதவி சன்னி இல்ஸாமியருக்கும், சபாநாயகர் பதவி ஷியா இஸ்லாமியருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இட ஒதுக்கீடு, அமைச்சரவை, அரசு நிர்வாகத்திலும் நிலவுவதால், ஊழல் புரிவோர், தம் இனம் சார்ந்தவர்களை தூண்டிவிட்டு தப்பும் சூழல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வராத டாலர் வங்கிகள் திவால்

சுற்றுலா, அறிவுசார் சொத்துக்கள், வங்கிகளில் வெளிநாட்டு டெபாசிட், பிற நாடுகளின் உதவிகளே அந்நாட்டிற்கு டாலர் வருவதற்கான வழியாகும். ஆனால் ஷியா பிரிவினருக்கு ஈரான் உதவி, வளைகுடா நாடுகளின் பாராமுகம், சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலா துறையும் முடங்கியதால், தவறான கொள்கையால் தத்தளித்த வங்கிகள் டெபாசிட்களை திரும்ப வழங்க முடியாமல் நொடிந்தன.

 2020 பெய்ரூட் துறைமுக வெடிப்பு
1.10 லட்சம் கோடி இழப்பு

இந்நிலையில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருக்கும் லெபனானின் பெய்ரூட் துறைமுகம், கடந்த 2020 ஆகஸ்ட் 4 ஆம் தேதி  அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தால் தரைமட்டமானது. 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்த இந்த பேரழிவால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது. இது பொருளாதாரத்தை மேலும் முடக்கியது. 

அரசியல் சீர்திருத்தம் கோரி தொடரும் மக்கள் போராட்டம்

லெபனான் பிரதமர் ராஜினாமா செய்து ஓராண்டு நிறைவடையும் சூழலில் இன்னும் புதிய அரசு அமையவில்லை. அரசு  அமைப்பதில் தொடர் குளறுபடி நிலவும் சூழலில், தற்போது வீதிகளில் போராடுவோர் மதங்களால் வேறுபட்டிருந்தாலும், அவர்களுடைய கோரிக்கை என்னவோ அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்