கொரோனா வைரஸ் தோற்றம் -21 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதலில் எதிலிருந்து மனிதர்களுக்கு பரவியது? பல்வேறு உலக நாடுகளின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? பார்க்கலாம்....
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தோற்றம் பெரும் விவாதமாக நீடித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த 21 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த ஆய்வில் அமெரிக்கா, ப்ரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு முடிவுகளில், வூஹான் கால்நடை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்கிற கருத்து முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது.
வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்கிற கருத்து முன்பு பரவலாக முன்வைக்கப்பட்ட நிலையில், அதைவிட விலங்குகளிடமிருந்து பரவியதற்கு தான் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவிய புவியியல் தடங்கள், வூஹான் கடல் உணவு சந்தை மற்றும் கால்நடை சந்தை பகுதியை குறிப்பதாகவும், இந்த பகுதிகளில் தான் முதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு முடிவு.
கொரோனா வைரஸ் தோன்றியாக சொல்லப்படும் ஆய்வகத்திற்கும், கால்நடை சந்தைக்கும் அதிக தொலைவு உள்ளதாகவும், ஆரம்பகட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஆய்வகம் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்படவில்லை என்பதையும் ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
2002 -ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸ் தொற்றும் விலங்குகளிடமிருந்துதான் பரவியது என கூறும் விஞ்ஞானிகள், கடந்த 20 ஆண்டுகளில் 5 விதமான வைரசுகள் விலங்குகளிடமிருந்து பரவியதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், ஆய்வக விபத்து மூலமாக கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்கிற வாதத்தை முழுவதுமாக புறக்கணிக்க முடியாது என கூறும் விஞ்ஞானிகள், அதற்கான சாத்தியம் குறைவாக காணப்படுவதுடன், உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்க உளவு அமைப்பு நடத்திய கொரோனா தோற்றம் பற்றிய ஆய்வறிக்கை அதிபர் ஜோ பைடனிடம் செவ்வாய்கிழமை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையும் விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story