ஆப்கானிஸ்தான் - இந்தியா வர்த்தகம் : இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன?
இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியிருக்கும் நிலையில், ஆப்கானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது என்ன? இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன...? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே பெருமளவு வர்த்தகம் பாகிஸ்தான் வழியாக நடைபெறுகிறது.
தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள், சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தியிருப்பதாக இந்திய ஏற்றுமதி கழகங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் அஜய் சாகாய் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆப்கானிஸ்தானிலிருந்து உலர் திராட்சை, வால்நட், பாதாம், அத்தி பழம், பைன் நட், பிஸ்தா, உலர் ஆப்பிரிகாட், செர்ரி, தர்பூசணி மற்றும் மூலிகைகளை இறக்குமதி செய்கிறது.
மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு டீ, காஃபி, மிளகு, பருத்தி, மருத்துவ பொருட்கள், மசாலா பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
கொரோனாவுக்கு மத்தியில் 2020-21 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 10 ஆயிரத்து 413 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் ஏற்றுமதி 6 ஆயிரத்து 143 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், இறக்குமதி 3 ஆயிரத்து 793 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் இருந்துள்ளது.
இந்தியா பெரும்பாலும் உலர் பழங்கள் இறக்குமதிக்காக ஆப்கானை சாந்திருக்க வேண்டியதுள்ளது. இந்தியா 85 சதவீத உலர் பழங்களை ஆப்கானிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
ஆப்கானில் தொடர் குழப்பம் காரணமாக உலர் பழ வகைகளின் விலை உயரும் என இந்திய ஏற்றுமதி கழகங்களின் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Next Story