ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் - இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்கள்
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை அடுத்து படிப்படியாக முன்னேறி வந்த தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.
இதையடுத்து அச்சத்தில் மக்கள் அனைவரும் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். தூதரக அதிகாரிகளை திரும்பபெற்ற இந்திய அரசு, விமான படை விமானம் மூலம் தூதரக அதிகாரிகளை மீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க ஆயுத உதவிகளை வழங்கிய இந்திய அரசு, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது.
ஆண்டுக்கு 700 முதல் 800 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய பயிற்சி மையங்களில் குறுகிய கால பயிற்சிகளை பெறுகின்றனர்.
தற்போது இந்தியாவில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 150 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இத்தகைய சூழலில் அவர்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதில் பெரும்பான்மையான வீரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழல் காரணமாக, அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் குறித்து கவலையில் உள்ளனர்.
காபூலை கைப்பற்றியவுடன் வீடு வீடாக சென்று சோதனையிட்ட தலிபான்கள், ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது.
எனினும் அவர்களது பயிற்சி காலம் இன்னும் மீதம் உள்ளதால், இதுகுறித்து இந்திய அரசு விரைவில் முடிவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story