"டி20 உலகக்கோப்பையில் பங்கேற்போம்" - ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்
படையெடுப்பு முதல் ஆட்சியை கைப்பற்றியது வரை... நீண்ட நாட்களாக ஆப்கானை பதற்றத்திலேயே வைத்துள்ளனர் தலிபான்கள்..
இவர்களது ஆட்சிக்கு பயந்து பொதுமக்கள் நாட்டை விட்டு தப்ப முயன்ற காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளன..
நாட்டில் சிக்கியுள்ள தனது குடும்பத்தாரை எப்படி மீட்பேன் என ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கூறிய கருத்து அங்கு நீடிக்கும் நிலவரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது
கடந்த முறை ஆட்சி செய்த போது பெண்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, விளையாடக்கூடாது என தலிபான்கள் போட்ட கடுமையான சட்டதிட்டங்கள்தான், அவர்களை பார்த்து மக்கள் அஞ்சுவதற்கு ஒரு காரணம் என பேசப்படுகிறது....
தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அன்று இருந்த நிலையே மீண்டும் திரும்பலாம் என பலர் எண்ணுகின்றனர்..
நாங்கள் அமைதியை விரும்புகிறோம், அமைதியான முறையில் ஆட்சி செய்வோம் என தலிபான்கள் கூறினாலும், மக்களிடம் பயம் விலகியதாக தெரியவில்லை..
இந்த சூழலில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற ஆப்கன் அணி, போட்டியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆப்கன் கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பையில் நிச்சயம் பங்கேற்போம் என அறிவிப்பு வெளியிட்டது.
தலிபான்களால் கிரிக்கெட் தடை படாது என்றும், அவர்கள் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் எனவும் தெரிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்,
தலிபான்களால் தான் இங்கு கிரிக்கெட் பிரபலம் அடைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும், விளையாட்டு வீரர்கள், பெண்கள் என பெரும்பாலான மக்களை இந்த ஆட்சி மாற்றம் பதற்றமடைய வைத்துள்ளதையே அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் காட்டுகின்றன.
Next Story