ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் யார்?; இடைக்கால அரசு இல்லை- தலிபான்கள்
தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான அப்துல் கனி, ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான அப்துல் கனி, ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்த நாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது. இந்த நிலையில், அதிபராக இருந்து வந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அஹ்மத் ஜலாலி தலைமையில் இடைக்கால அரசு அமையும் என்று தகவல் வெளியானது. அதனை தலிபான்கள் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே முல்லா அப்துல் கனி என்பவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்படுவார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களுள் ஒருவராக கூறப்படும் அப்துல் கனி, தற்போது தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தலிபான்கள் கையெழுத்திட்டதை இவர் மேற்பார்வை செய்தாகவும் கூறப்படுகிறது.
Next Story