பிரேசில் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு - பதவி விலக மக்கள் கோரிக்கை

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரைப் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் கார்களில் பேரணியாக சென்றனர்.
பிரேசில் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு - பதவி விலக மக்கள் கோரிக்கை
x
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரைப் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் கார்களில் பேரணியாக சென்றனர். சா பலோ மாகாணத்தில் நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் தங்களின் காருடன் பங்கேற்றனர். சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் பேரணியில் கார்களைப் பயன்படுத்தியதகாவும், கொரோனா பாதிப்பை போல்சனேரோ மோசமாக கையாண்டு வருவதாகவும், பேரணியில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்து உள்ளனர். 

அதிகரிக்கும் கொரோனா தொற்று - பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்க திட்டம் 

இஸ்ரேலில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்து உள்ளது. இன்று முதல், இந்த தடையை அமல்படுத்த உள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறி உள்ளது. இதனிடையே, தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து பென் குரியன் விமான நிலையத்தை மூடி உள்ளதாகவும், உருமாறிய கொரோனா பாதிப்பை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார்.

எகிப்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்/சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது 

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீனா தயாரித்த சினோபார்ம் தடுப்பூசி அங்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, படிப்படியாக மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஹாலா சையத் கூறி உள்ளார்.

நெதர்லாந்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் அம்ஸ்டர்டேமில் திரண்ட ஏராளமான மக்கள், ஊரடங்கை ரத்து செய்யுமாறு கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்த நிலையில், கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் புதிய வைரஸ் : பயண தடையை விதிக்கிறார் பைடன் 
- அமெரிக்கர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கர்கள் அல்லாத பிறநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடையை விதிக்க உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் புதிய வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறார் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஃபைசர் கொரோனா தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அனுமதி

அமெரிக்க மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஃபைசர் - பயான்டெக் கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தடுப்பூசியை, தங்கள் நாட்டில் பயன்படுத்த அனுமதி அளித்து உள்ளதாகவும், இரண்டு தவணைகளாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறி உள்ளார்.

வெள்ளத்தில் மிதக்கும் மொசாம்பிக் - புயல் தாக்கியதால் கடும் சேதம்-லட்சக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எலாய்ஸ் புயல் அந்நாட்டை சமீபத்தில் தாக்கிய நிலையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், புயல் மற்றும் வெள்ளத்தால், லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






Next Story

மேலும் செய்திகள்