முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு - கொதிப்படைந்துள்ள உலகத் தமிழர்கள்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இடித்து அழித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு - கொதிப்படைந்துள்ள உலகத் தமிழர்கள்
x
எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள்... நிற்காமல் கேட்டுக்கொண்டிருந்த அழுகுரல்கள்...இதுதான் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் இலங்கை தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் நிகழ்த்திய கொடூரம். இலங்கையில் வாழும்  தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனஅழிப்பின் உச்சக்கட்டமே இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.முள்ளிவாய்க்காலில் குண்டு மழை பொழிந்து இலங்கை ராணுவம் கொன்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை,   நினைவுகூரும் வகையில், யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது.  அந்த நினைவுத்தூணை தான் இலங்கை அரசு தற்போது  இரவோடு இரவாக தகர்த்தெறிந்திருக்கிறது.நேற்று இரவு நினைவுத்தூண் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது என்ற  அதிர்ச்சி செய்தியை அறிந்த மாணவர்கள், தேசிய உணர்வாளர்கள்,  அரசியல் கட்சியினர் பல்கலைக்கழகத்தில் குவிந்தனர். இலங்கை  அரசின் இந்த செயலுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.இலங்கையில் தமிழகர்கள் அமைத்திருந்த நினைவுத் தூணை இலங்கை அரசு தகர்த்ததற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பதை பிரதமர் மோடி கண்டிக்கக வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடபோவதாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவுத்தூண் அமைப்பதை கூட அனுமதிக்காத ஆட்சியில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடன் வாழ முடியும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவுதூண்  இடிப்பு தமிழர்கள் மீதான இனைப்படுகொலையின் தொடர்ச்சி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழர்களின் உயர்வையும், உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக சர்வாதிகாரமாக இலங்கை அரசு நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.இதனிடையே, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடித்து அழிக்கப்பட்டது, உலகம்  முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், அந்த சம்பவத்தை கண்டித்து உலகின் பல பகுதிகளில் போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்