அதிவேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் - ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு
புதிய கொரோனா வைரசால் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தளர்ந்து வந்த பிரிட்டன் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது புதிய கொரோனா வைரஸ் பரவல். வழக்கத்துக்கு மாறாக புதிய வைரஸ் 70 சதவீத வேகம் கொண்டு பரவுவதால், தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் இங்கிலாந்தில் தொற்று படிப்படியாக குறைந்து சராசரியாக 2 ஆயிரத்துக்கும் கீழ் காணப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அதே தொற்று கடந்த நவம்பர் மாத இறுதியில் சராசரியாக 20 ஆயிரத்தை நெருங்கியது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவ தொடங்கி, தற்போது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்தையும் தாண்டுகிறது. இதில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இங்கிலாந்தில் உயிரிழப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. புதிய கொரோனா பரவலுக்கு முன் இங்கிலாந்தில் சராசரியாக 600 வரை சென்ற இறப்பு விகிதம், மாறுபட்ட பரவலுக்கு பின்னும் கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள திடீர் பரவலால் அந்நாட்டின் உடனான வர்த்தக மற்றும் பொது போக்குவரத்துக்கு ஐரோப்பிய நாடுகள் முதல் பல்வேறு நாடுகள் தடை விதித்து உள்ளது. உலக நாடுகள் தடையால் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் மற்றும் மாணவர்கள், பிரிட்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பிரிட்டனில் 4-வது கட்ட ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டு உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் தளர்வுகளில் இருந்து அரசு பின்வாங்கி உள்ளது. மாறுபட்ட வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு இயக்குநர் மைக்கேல் ரேயான், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவல் தென்படுகிற போதிலும் தொற்று கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதேநேரம் உலக சுகதாார அமைப்பின் தொற்று நோய் பிரிவின் மருத்துவர் மரியா வானோ, உருமாறிய தொற்று பரவும் வேகம் 1 புள்ளி 1 சதவீதத்தில் இருந்து 1 புள்ளி 5 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை கொண்டு பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற போதிலும் தடுப்பூசி முழு வீச்சில் செயல்படுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
Next Story