இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு
இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் இந்திய சீன விவகாரம் தொடர்பாக முதல் முறையாக தொலைபேசியில் பேச்சு நடத்தினர். அப்போது,
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க, அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இரு நாட்டு தலைவர்கள் இடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எல்லை விவகாரத்தை கையாள்வதில் இருநாடுகளிடையே போதிய ஒத்துழைப்பையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
Next Story