இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்,  பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் அப்போது ஆலோசனை நடத்தினர்.பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும், தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக கூறினர்.

அமெரிக்காவுடன் முக்கிய 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக சிக்கல் பேசப்படவில்லை என தகவல். இதனிடையே, இந்தியா - அமெரிக்கா  இடையே பாதுகாப்பு, எரிசக்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க 21 ஆயிரத்து 606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ய, ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில், இணையதள சேவைகளை அதிகம் பயன்படுத்தும் சந்தையாக இந்தியா உள்ள நிலையில், பாதுகாப்பான 5ஜி தொழில்நுட்ப சேவையை அளிப்பது குறித்து ஆலோசித்தோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மதசுதந்திரம் குறித்து மோடியுடன் பேசியதாகவும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்கவில்லை எனவும் தெரிவித்தார். டெல்லி கலவரம் உள்நாட்டு விவகாரம் என குறிப்பிட்ட அவர்,  காஷ்மீர், தாலிபான் உடனான ஒப்பந்தம் குறித்தும் விரிவாக பேசியதாக தெரிவித்தார். இஸ்லாமிய மத தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளதாகவும் கூறினார். ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழித்துள்ளதாக கூறிய டிரம்ப், ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை சிறையில் தள்ளியது, தமது சாதனை என்றார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண, மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்ட டிரம்ப்,பிரதமர் மோடி ஆன்மிகவாதி எனவும் அமைதியான, வலிமையான தலைவர் எனவும் புகழாரம் சூட்டினார். 

இதனை தொடர்ந்து,  இந்திய தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு விதிகளை தளர்த்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அமெரிக்காவில் முதலீடு செய்வதை, முதலீடாக மட்டும் பார்க்கவில்லை, அவற்றை வேலைவாய்ப்புகளாக பார்க்கிறேன் எனவும் டிரம்ப் கூறினார். இருநாடுகள் இடையிலான பொருளாதார உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், அமெரிக்காவில் முதலீடு செய்ய வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி,  டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார மங்களம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







Next Story

மேலும் செய்திகள்