அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோர்ஸ் ஒன், தனி விமானம் மூலம் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார். முன்னதாக சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் அதிபர் வருகைக்காக பிரதமர் மோடி காத்திருந்தார். விமானத்தில் இருந்து அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் இறங்கியதும் டிரம்புக்கு கைகொடுத்து கட்டி அணைத்து மோடி வரவேற்பு அளித்தார். பின்னர் மெலானியாவுக்கு கைகொடுத்து  வரவேற்றார். 

முப்படைகளின் அணிவகுப்பு- கலைநிகழ்ச்சிகள் , பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு

விமான நிலையத்தில் முப்படைகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து காருக்கு செல்லும் வழியில் குஜராத் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான மண்பாண்ட நடனம்,  குடை நடனம் நடைபெற்றது. மேளதாங்கள் இசைக்கப்பட்டன. குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி இசைக்கப்பட்டபோது, அது குறித்து அதிபர் டிரம்புக்கு,  பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். 

டிரம்ப் கருப்பு கோட், மெலனியா வெள்ளை உடை - கவனத்தை ஈர்த்த கருப்பு-வெள்ளை ஆடைகள்

அதிபர் டொனால்ட் டிரம்ப் கருப்பு வண்ணத்தில் கோட் சூட்டுடன் மஞ்சள் வண்ண டை அணிந்திருந்தார். அவரது மனைவி மெலனியா, வெள்ளை நிறத்தில் முழு கை சட்டை பேண்ட் வகையிலான உடையில் குறுக்கே கருப்பு பட்டை அணிந்திருந்தார்.  ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து இறக்கும்போது இருவரது ஆடைகளும் கருப்பு-வெள்ளை என்று சொல்லும்படி இருந்தது கவனத்தை ஈர்த்தது.

விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்ற டிரம்ப்

விமான நிலையத்தில் இருந்து, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரத்துக்கு அதிபர் டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஏராளமான மக்கள் திரண்டு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். 

சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  - மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மரியாதை

விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டிரம்ப் அங்கு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.  

சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு ஆசிரம தலைமை நிர்வாகி, கைத்தறியால் ஆன மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். பின்னர், ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கதர் நூலால் ஆன மாலையை டிரம்ப் அணிவித்தார். ஆசிரமத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டதுடன், காந்தியடிகளின் கைராட்டையை ஆர்வமுடன் பார்த்து, அதை இயக்குவது குறித்து கேட்டறிந்தார். 

ஆசிரமத்தில் இருந்த, தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை பேசாதே, தீயவற்றை கேட்காதே என்ற தத்துவத்தை விளக்கும் குரங்கு பொம்மைகள் குறித்தும் டிரம்ப்புக்கு மோடி விளக்கினார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஆசிரம வருகை பதிவேட்டில் மோடியை புகழ்ந்த டிரம்ப்

ஆசிரம வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப், மோடி தனது சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.  எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி என்றும்,  அற்புதமான பயணம் என்றும் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.


ஆசிரம திண்ணையில் புகைப்படம் எடுத்துக் கொண்ட டிரம்ப்

ஆசிரமத்தை பார்வையிட்ட பின்னர்,  ஆசிரம திண்ணையில் அமர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆசிரம செயல்பாடுகள் குறித்து டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

கை ராட்டை செயல்பாட்டை ஆர்வமாக கேட்ட டிரம்ப்

சபர்மதி ஆசிரமத்தில் கை ராட்டையை பார்வையிட்ட டிரம்ப், யாரும் எதிர்பார்க்காத வகையில், அதன் அருகே அமர்ந்து இயக்குவது குறித்து செயல்முறையை கேட்டார்.  உடன் மெலனியாவும் அமர்ந்ததால், அவர்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். பின்னர் ஆசிரம நிர்வாகிகள் ராட்டையில் நூல் நூற்பது குறித்து டிரம்புக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, மோடெராவில் உள்ள படேல் விளையாட்டு மைதானத்துக்கு பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.












Next Story

மேலும் செய்திகள்