கிறிஸ்துவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக கிறிஸ்துவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம், ரத்து செய்ததால் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
ஆசியா பீபி என்ற கிறிஸ்துவ பெண், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த கிறிஸ்துவ பெண்ணுக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து அவர் 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்து நேற்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் பாகிஸ்தானின் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story