பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் 60வது பிறந்த நாள்...

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸனுக்கு இன்று பிறந்த நாள்... அவரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு...
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் 60வது பிறந்த நாள்...
x
* 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். அந்த குடும்பத்தில் மொத்தம் 10 குழந்தைகள். ஜாக்சன் அதில் எட்டாவது பிள்ளை. குடும்பத்தையே வறுமை பிடித்து ஆட்டிய போதும் மைக்கேல் ஜாக்ஸனை ஆட்டுவித்தது இசைதான்.

* பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என தனக்குத் தோன்றுவதை எல்லாம் செய்தார் ஜாக்சன். அது பின்னாளில் புதியதொரு கலையாகவே மாறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

* 11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, 'தி ஜாக்சன் 5' என்ற இசை நிகழ்ச்சி, காண்பவரை எல்லாம் அசத்தியது. ஏகோபித்த வரவேற்பின் காரணமாக அதனை ஆல்பமாகவும் வெளியிட்டார் ஜாக்சன்.இதை தொடர்ந்து வெளியான 'ஐ வாண்ட் யூ பேக்' என்ற ஆல்பமும் செம ஹிட். ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. 

* இசையுலகில் 1971 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது மைக்கேல் ஜாக்சனின் ராஜாங்கம். 2009ல் அவரது இறப்பு வரை அவர் புகழ் குறையவே இல்லை. சும்மா நடனம் ஆடிப் பழகினாலே இவர் பெரிய மைக்கெல் ஜாக்சன் எனச் சொல்லும் பழக்கம் இன்றும் நம்மை விட்டுப் போகவில்லை. நவீன நடனம் என்றாலே அதற்கான அருஞ்சொற்பொருள் மைக்கெல் ஜாக்சன்தான்.

* 1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற ஆல்பங்கள் விற்பனையில் சாதனை படைத்தன. நடன அசைவுகளில் மூன் வாக் என்பது மைக்கேல் ஜாக்சனின் சிக்னேச்சர். 

* எம் டி.வியில் ஜாக்சன் நடத்திய 'பீட் இட்', 'திரில்லர்' போன்ற இசை நிகழ்ச்சிகள், ஜாக்சனை பாப் கடவுளாக ஆக்கிவிட்டன. ஆனால், மைக்கேல் ஜாக்சனின் உடல் நிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருந்தது. 

* உலகமே தன்னைப் போற்றினாலும் தான் ஒரு கருப்பராக இருந்ததில் மைக்கெல் ஜாக்சனுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தோல் வெளிரிப் போகும் விடிலிகோ எனும் நோய் அவருக்கு இருந்ததாக அவரே சொல்லியிருக்கிறார். எது எப்படியோ... பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலம் தன் முகத்தை பலமுறை திருத்தி எழுத்தினார் ஜாக்சன். 

* பண விவகாரம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் தொடர்ந்து வழக்குகளை சந்தித்தார் இந்த ஜாம்பவான். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. இருமுறை ஏற்பட்ட திருமண பந்தமும் நிலைக்கவில்லை. எல்லா துயரங்களும் சேர்ந்து மைக்கேல் ஜாக்சனை படுக்கையில் தள்ளின. 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அவரின் உயிரையும் பறித்தது.

* இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது மைக்கேல் ஜாக்சன் விஷயத்தில் முற்றிலும் உண்மை. அவர் அணிந்த ஆடைகளில் தொடங்கி அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் வரை எல்லாமே பல கோடிகளில் ஏலம் விடப்பட்டன. 

* அவர் வெளியிடாமல் வைத்திருந்த பாடல்கள் என்ற பெயரில் சோனி நிறுவனம் அவரின் இறப்புக்குப் பின் ஒரு ஆல்பத்தை வெளியிட்டு பணம் பார்த்தது.  அந்தப் பாடல்கள் பொய்யானவை என்றும் மைக்கேல் ஜாக்சனால் உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் கடந்த வாரம்தான் சோனி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இறந்து இத்தனை வருடம் சென்ற பிறகும் உலக மக்களின் மனங்களில் மட்டுமல்ல... உலக மீடியாக்களின் தலைப்புச் செய்திகளிலும் நீங்காத இடம் பிடித்து நிற்கிறார் இந்த ஆடல் அரசன்.


Next Story

மேலும் செய்திகள்