கிரிக்கெட் வீரரிலிருந்து நாட்டின் பிரதமர் வரை..இம்ரான் கான் கடந்து வந்த பாதை...
தனது கிரிக்கெட்டால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இம்ரான்கான், அரசியல் அவதாரமெடுத்து மீண்டும் உலகின் பார்வையை ஈர்த்துள்ளார். அவரைப் பற்றிய ஒரு தொகுப்பு
பாகிஸ்தானின் லாகூரில் 1952ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார் இம்ரான் கான். இம்ரான் கானின் தந்தை பொறியாளர் என்பதால், செல்வ செழிப்போடு இம்ரான் கான் வளர்ந்தார்.
தனது 13வது வயதில் இங்கிலாந்து சென்ற இம்ரான் அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தார். கிரிக்கெட் காதலால் கல்லூரி அணியில் சேர்ந்து கிரிகெட் மட்டையை கையில் பிடித்தார்.
இம்ரான் கான் தனது 18வது வயதில் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பெற்று முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். ஒரு கதாநாயகனுக்கான தோற்றம் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கில் அதிரடி என திகழ்ந்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களையும் தாண்டி உலகத்தையும் கவர்ந்தார்.
1982ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் பொறுப்பேற்ற பிறகு பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. கிரிக்கெட் வீரராக இருந்தபோதே சமூக நலனிலும் அக்கறை செலுத்தினார் இம்ரான். புற்றுநோய்க்கான இலவச மருத்துவமனையை உருவாக்குவதே தனது லட்சியம் என அறிவித்தார். லட்சியத்தை நிறைவேற்ற உலகம் முழுவதும் பணம் திரட்டி கனவு மருத்துவமனையை திறந்தார். 1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் பாகிஸ்தானின் தனிப்பெரும் ஸ்டாராக உயர்ந்த இம்ரான் கான்,1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரீக் இன்சாஃப் என்ற கட்சியை தொடங்கினார்.
பாகிஸ்தான் அரசியல் களத்தில் இம்ரான் கான் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது முதல் தேர்தலில் அவரும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் தான் இம்ரான் கான் எம்.பி.யானார்.
2007ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் முஷாரப்பால் இம்ரான் கான் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது அரசியலுக்கு பல தடைகள் உருவாக்கப்பட்டன. தடைகளைத் தாண்டிபுதிய பாகிஸ்தானைப் படைப்பேன் என்றார் இம்ரான். 2013 பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இம்ரானின் வளர்ச்சியை தடுக்க அவருக்கு எதிராக அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டன. இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து இம்ரான் தனது மதகுருவையே மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது இம்ரான் கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
அடுத்து பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தால் தனது பதவியை இழக்க, ஆளும் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி எழந்தது அதை அறுவடை செய்யும் முயற்சிகளில் இறங்கினார் இம்ரான். அதன் பலனை இப்போது அவர் அடையப்போகிறார். தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியா உடனான உறவு உள்ளிட்ட விவகாரங்களில் இம்ரான் கான் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்ர்ப்பு அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
Next Story