தானே இயங்கும் ரோபோ நாய்
அச்சு அசல் மனிதனைப் போலவே தன்னைத் தானே பேலன்ஸ் செய்து இரண்டு கால்களில் நடக்கும் ரோபோவை உருவாக்கியிருக்கிறது பாஸ்டன் டயனமிக்ஸ் நிறுவனம்
ரோபோ என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்ற இலக்கணத்தை உடைத்து வருகிறது பாஸ்டன் டயனமிக்ஸ். கூகுளின் கிளை நிறுவனமான இது அச்சு அசல் மனிதனைப் போலவே தன்னைத் தானே பேலன்ஸ் செய்து இரண்டு கால்களில் நடக்கும் ரோபோவை உருவாக்கியிருக்கிறது. இதன் பெயர் அட்லஸ். நடக்கவும் பல்டி அடிக்கவும் கூடிய இந்த ரோபோ, சமீபத்தில்தான் தன்னால் ஓடவும் முடியும் என நிரூபித்திருக்கிறது. அதுவும் சமதளத்தில் அல்ல, கற்களும் புற்களும் நிறைந்த காட்டுப் பகுதியில்...
இதே போல பாஸ்டன் டயனமிக்ஸ் தயாரிக்கும் நான்குகால் ரோபோதான் ஸ்பாட் மினி. நாயைப் போலவே இயங்கும் இந்த ரோபோ, இதுநாள் வரை புரோகிராம் செய்து வைத்த பாதைகளில்தான் பயணம் செய்தது. தற்போது இந்த ரோபோ நாய், என் வழி தனி வழி என தன் ரூட்டை தானே தீர்மானிக்கிறது.
இது நிஜம்தானா இல்லை கிராஃபிக்ஸ் காட்சியா என அறிவியல் உலகமே ஆச்சரியப்பட்டுக் கிடக்கிறது. இந்த ரோபோக்கள் எப்போது மனிதனுக்குப் போட்டியாக களமிறங்கும் எனக் கேட்கிறார்கள் சிலர். ஆனால் பாஸ்டன் டயனமிக்ஸ் தனது மனித ரோபோவுக்கும் நாய் ரோபோவுக்கும் இன்னும் நிறைய கற்றுத் தர வேண்டியிருப்பதாகச் சொல்கிறது. ஒருவேளை, டாக்டர் வசீகரன் போல சுயமாய் சிந்திக்க சொல்லிக் கொடுப்பார்களோ!
Next Story