அசதியில் மெரினா பீச்சில் தூங்கிய Rapido ஊழியருக்கு நேர்ந்த அதிர்ச்சி... சென்னை டூ குமரி வரை வேட்டை

x

அசதியில் மெரினா பீச்சில் தூங்கிய Rapido ஊழியருக்கு நேர்ந்த அதிர்ச்சி... சென்னை டூ குமரி வரை வேட்டை.. ஏற்காட்டில் சொகுசு வாழ்க்கை

சென்னையில் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்து வந்தவரை போலீசார், அவரது பாணியிலேயே சென்று மடக்கியுள்ளனர். போலி போலீஸ் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம்..

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேலு. ரேபிடோ பைக் ஓட்டி வரும் இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி உடல் அயற்சியால் இரவு நேரத்தில் மெரீனா கடற்கரையில் தூங்கியுள்ளார்.

அப்போது மிடுக்கான போலீஸ் சீருடையுடன் அங்கு உலாவிய நபர், யாரை கேட்டு இங்கு தூங்கினாய் என மிரட்டி குமரவேலுவிடம் செல்போன், 500 ரூபாய் பணம், ஏடிஎம், கிரெடிட் கார்டு பறித்துவிட்டு, காவல்நிலையத்தில் வந்து வாங்கிக்கோ எனக்கூறி தப்பியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த குமரவேலு, காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்த போது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதனிடையே, ஏடிஎம்மின் பாஸ்வோர்டை போனில் பதிந்து வைத்திருக்க, அதைவைத்து 8 ஆயிரம் ரூபாயை சுருட்டியுள்ளார் அந்த போலி போலீஸ்...

இதுபோன்று தமிழகம் முழுவதும் அரங்கேறிய சம்பவங்களை விசாரித்த போலீசார், திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் போலி போலீசாக நடித்து வழிப்பறி செய்ததை கண்டுபிடித்தனர். குமரவேலுவை வைத்து அதனை உறுதிப்படுத்தினர்.

உடனடியாக விக்னேஷை பிடிக்க அவரது பாணியிலேயே பயணித்த போலீசார், வங்கி அதிகாரி போல திருப்பத்தூரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்று தங்களது மகன் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக அவரது அம்மாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனைகேட்டு அதிர்ந்த விக்னேஷின் அம்மா, அவரை தொடர்புகொள்ள, அவ்வளவுதான் சிக்கினார் விக்னேஷ்.

பின்னர் ஏற்காட்டில் இருந்த விக்னேஷை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்ததில், போலி போலீசாக நடித்து மதுரை, திருமங்கலம், சமயநல்லூர், கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது.

போலீசாக நடித்து பணத்தை பறித்த விக்னேஷ், ஊர் ஊராக சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதுபோன்று யாராவது மிரட்டினால் மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது காவல்துறை.


Next Story

மேலும் செய்திகள்