"எல்லை தாண்டி வந்தால் நாங்களே எரிப்போம்"...யாழ்ப்பாணம் கடல் தொழில் அமைப்பு மிரட்டல்
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் பேட்டி அளித்தபோது, ராமேஸ்வரம் மீனவர்கள் கைதான சம்பவத்தை வைத்து, கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார். கச்சத்தீவு திருவிழாவிற்கும் எல்லை தாண்டி வரும் மீனவர்கள் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், இந்திய மீனவர்கள் வந்து திருவிழாவை கொண்டாடி விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். மீனவர்களை விடுதலை செய்தால்தான், கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவோம் என்று கூறினார் ராமேஸ்வரம் மீனவர்கள் திருவிழாவுக்கு வரவே வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய கடற்படை நினைத்தால், இந்திய மீனவர்களின் படகு இலங்கை எல்லைக்குள் வராது என்றும், எல்லை தாண்டி வரும் படகுகளை தாங்களே கடலில் சென்று எரிக்கபோவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து, வரும் 20-ஆம் தேதி, இந்திய தூதகரகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.