வேலைக்கு சென்ற இடத்தில் எமன்..சத்தமே இல்லாமல் பிரிந்த உயிர்..உடலை தேடி அலைந்த குடும்பம்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது. இனந்த வனப்பகுதியில் அதிகளவில் மான், யானை உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருவதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே குள்ளப்ப கவுண்டன்பட்டி பகுதியில் வசித்து வரும் 55 வயதான ஈஸ்வரன் என்பவர், வனப்பகுதியை யொட்டிய குத்தகைக்கு எடுத்துள்ள தோட்டத்தில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் சனிக்கிழமை இரவு அன்று வண்ணாத்தி பாறை பகுதியில் ஈஸ்வரன் பணியில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிரு்நத வனத்துறையினர், ஈஸ்வரன் அத்துமீறி வனப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், விலங்குகளை வேட்டையாட வந்ததாகவும் கருதி அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, வனத்துறையினருக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரன் கத்தியை காட்டி வனத்துறையினரை மிரட்டியதாக சொல்லப்படும் நிலையில், வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் அறிந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் வந்து, ஈஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈஸ்வரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரின் காதுகளில் இடியாய் விழுந்து அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. ஈஸ்வரனின் உடல் எங்கு வைக்கப்படடிருக்கிறது என்றே தெரியாமல் பதறியடித்தபடி, கம்பம் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குவியத் தொடங்கியவே, அங்கு பரபரப்பு நிலவியது.
ஆனால், அங்கு ஈஸ்வரனின் உடல் இல்லாததால் ஏமாற்றமடைந்த உறவினர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் அளவிற்கு என்ன குற்றம் செய்தார் என்றும், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு நிலவியது.
பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற உறவினர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால், பதற்றமான சூழல் உண்டானது. (தேனி ரிப்போர்ட்டர்)
தந்தையை சுட்டுக்கொன்றதை போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஈஸ்வரனின் மகள் "துப்பாக்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் சுடலாமா" எனவும் தனது ஆதங்கத்தை கொட்டுகிறார்?
