மக்களே ரெடியா..? வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
வரும் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், அதை ஒட்டிய குமரிக்கடலிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கைக் கடலோரம், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும், வடக்கு ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய - வடக்கு - தென்கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீசக்கூடும். மேலும், நாளை இலங்கை கடலோரம், தெற்கு, மத்திய வங்கக் கடலிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.