விருதுநகர் டூ தேனி இப்போ 100KM-இந்த அதிசயம் நடந்தால் வெறும் 3 KM-தொட்டுவிடும் தூரத்தில் வசந்த வாழ்வு
தேனி மாவட்டம் வருசநாடு அருகே, நிறைவுறும் தருவாயில் நிறுத்தப்பட்டிருக்கும் மலைச்சாலை திட்டத்தை முழுமையாக முடிக்குமாறு சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
காமராஜபுரம் - கிழவன்கோவில் மலைச்சாலை திட்டத்தை செயல்படுத்துமாறு தேனி மாவட்ட ஆண்டிப்பட்டி தாலுகா மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்...
அதிலும் குறிப்பாக வருசநாடு அருகே உள்ள காமராஜபுரம் பகுதி வாழ்மக்கள்..நகர்புற வாழ்வியலில் இருந்து, இந்த மக்களை இடையில் இருக்கும் மலையும், வனமும் பிரிக்கிறது.
இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது..
சுமார் 100கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தை, இந்த காமராஜபுரம் - கிழவன்கோவில் மலைச்சாலை திட்டம் மூலம் வெறும் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று விடலாம் என்கின்றனர்...
சுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்தி இந்த மலைச்சாலை திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது...
தொடர்ந்து, தேனி மாவட்ட எல்லையான காமராஜபுரம் வரையிலும், விருதுநகர் மாவட்ட எல்லையான கிழவன்கோவில் வரையிலும் சாலை அமைக்கப்பட்டு பேருந்தும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த இரு பகுதியையும் இணைக்கும் சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள பகுதி வனப்பகுதிக்குள் வருவதால், சாலை அமைக்க அனுமதி மறுத்து, முட்டுக் கட்டை போட்டிருக்கிறது வனத்துறை..
இந்த வனப்பகுதிக்குள் சாம்பல்நிற அணில்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதனால், கிழவன் கோவில் பகுதியில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் கோவிலாறு அணையில் பிடிக்கப்படும் மீன்களை வியாபாரிகள் தலைச்சுமையாக மலைப்பாதை வழியாக கொண்டு வந்து வருசநாடு பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர்.
இதனிடையே, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மலை பாதை வழியாக தாங்கள் நடந்து சென்று வருவதாகவும், ஒருமுறை கூட சாம்பல்நிற அணில் உள்ளிட்ட எந்த வன விலங்குகளையும் கண்டதில்லை எனக்கூறி வனத்துறையினரிடம் மன்றாடி வருகின்றனர் இந்த மக்கள்.
இரண்டு மாவட்ட மக்களும் இந்த மலைச்சாலை திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அனைத்து தேர்தல்களிலும் இந்த மலைச்சாலை திட்டம் வாக்குறுதியாக மட்டும் இடம்பெறுவதாக கூறி வேதனை தெரிவிக்கும் இவர்களை, அரசும், அரசு அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்..